சமையல் குறிப்புகள்
கோழிக்கறி உணவு வகைகள்

கோழிக்கறி குழம்பு

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 2 அல்லது 3
பூண்டு - 15 பல்
இஞ்சி - 2 இஞ்ச் அளவு
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 6
அன்னாச்சிப்பூ - 1
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துறுவல் - 1/4 கோப்பை
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கோழிக்கறியை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும்.

3. அடுப்பில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

4. கிராம்பு வெடிக்கும் போது சிறிது கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

5. பூண்டு லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

6. வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.

7. பிறகு மஞ்சள் தூள் மசாலா தூள் சேர்த்துக் கிளறவும்.

8. பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

9. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பிரட்டவும்.

10. பிறகு அதனுடன் கழுவி வைத்துள்ள கோழிக்கறி சேர்த்து பிரட்டவும்.

11. கோழிக்கறியை மசாலாவுடன் நன்கு பிரட்டியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

12. பாத்திரத்தை மூடி கோழிக்கறியை வேக வைக்கவும்.

13. தனியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி உரித்து வைத்துள்ள அரை கோப்பை சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

14. வெங்காயம் வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.

15. தேங்காய்த் துறுவல் சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் தனியே அரைத்துக் கொள்ளவும்.

16. கோழிக்கறி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்துக் கிளறவும்.

17. வதக்கி ஆற வைத்த சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு கொற கொறப்பாக அரைக்கவும். 18. அரைத்த வெங்காய விழுதை குழம்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

19.குழம்பு நன்கு கொதித்ததும் நறுக்கிய கறிவேப்பிலை, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. சின்ன வெங்காயத்தை அரைத்து ஊற்றுவதால் தேங்காய் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம்.

2. தேங்காய் சேர்த்த பிறகு அடிபிடிக்கும் ஆகையால் அருகிலேயே இருந்து அடிக்கடி கிளறி விடவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.