சமையல் குறிப்புகள்
குழம்பு வகைகள்

உருளைக்கிழங்கு கத்திரிக்காய் குருமா

potatobrinjal kuruma

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 4 (1/4 கிலோ)
கத்தரிக்காய் சிறியது - 5
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய்த் துறுவல் - 1 கோப்பை
பட்டை - 2 (1 இஞ்ச் அளவு)
கிராம்பு - 5
ஏலக்காய் - 1
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கசகச - 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை - 15
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லித்தழை - 1 தேக்கரண்டி (நறுக்கியது)
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

3. கத்திரிக்காயின் காம்பை மட்டும் நறுக்கி எறிந்து விட்டு, அடிப்பகுதியை மட்டும் நான்காக பிளந்து கத்திரிக்காய் முழுதாக இருக்குமாறு தண்ணீரில் போட்டு வைக்கவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.

5. பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

6. இதனுடன் கசகச, நிலக்கடலை, தேங்காய்த் துறுவல் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து அரைத்து தனியே வைக்கவும்.

7. அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து வெடித்ததும், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

8. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.

9. அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

10. இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேகவிடவும்.

11. உருளைக்கிழங்கு பாதி வெந்ததும், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

12. இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து லேசாகக் கிளறி, பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.

13. அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுதினைச் சேர்த்து வாசனை போகும் அளவுக்கு கொதிக்க வைக்கவும்.

14. குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. உருளைக்கிழங்கை பாதி வெந்ததும் கத்திரிக்காய் சேர்த்தால் தான், கத்திரிக்காய் குழையாமல் இருக்கும்.

2. குஸ்கா, புலாவ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.