சமையல் குறிப்புகள்
முறுக்கு வகைகள்

ஜவ்வரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 கோப்பை
அரிசி மாவு - 6 கோப்பை
கடுகு - சிறிதளவு
எலுமிச்சைம்பழம் - 1
புளித்த தயிர் - 1 கோப்பை
பச்சைமிளகாய் - 3
பெருங்காயம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. முதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.

2. ஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3. சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து விழுதில் சேர்க்கவும்.

4. பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த விழுதுடன் சேர்க்கவும்.

5. அதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.

6. பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

8. முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.

9. பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.

10. இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

11. முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.

12. முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.