சமையல் குறிப்புகள்
சிற்றுண்டி வகைகள்

பணியாரம்

paniyaram

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 1/2 கிலோ
உளுந்து - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 4 கொத்து
கொத்தமல்லித்தழை - 4 கொத்து
பச்சை மிளகாய் - 3
உடைத்த உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. அரிசியை, 3 மணி நேரம் ஊற வைத்து நைசாக இல்லாமல் கொஞ்சம் மரமரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

2. உளுந்தை 1 மணி நேரம் (அறைப்பதற்கு முன்) ஊற வைத்து மெத்மெத்தென வரும் வரை அரைக்கவும்.

3. இரண்டு மாவையும் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கி (கையினால்) வைக்கவும்.

4. அரைத்த மாவினை 8 மணி நேரம் வைத்து புளிக்க வைக்கவும்.

5. வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடலைப்பருப்பு, உடைத்த உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கவும்

8. பிறகு பெருங்காயம், சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி, புளிக்க வைத்த மாவில் கொட்டி கலக்கவும்.

9. பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாகியதும் கலக்கிய மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி மூடி போட்டு மூடவும்.

10. பணியாரம் வெந்து சிவந்ததும் திருப்பிப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு, பணியாரம் அடுத்த பக்கமும் வெந்து சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு

1. மாவு நன்றாக புளித்து இருந்தால் தான் பணியாரம் மிகவும் நன்றாக இருக்கும். இட்லிக்கு அரைத்த மாவு புளித்து இருந்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலைச் சட்னி, தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.

3. சிறிது புதினாத் தழையை பொடியாக நறுக்கி சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.